மும்பை BKC-யில் புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்த ஆடி
உலகளவில் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆடி மற்றும் சார்ஜ்ஸோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மும்பையின் BKC-யில் (Bandra Kurla Complex), புதிய அதிவேக சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்திருக்கிறது. 450W திறன் கொண்ட அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன் தற்போது மும்பையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிக செயல்திறனை வெளிப்படுத்துவதற்காக 500A லிக்விட்-கூல்டு கன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங்கை வழங்குகிறது. 114kWh பேட்டரி பேக் கொண்ட ஆடி Q8 55 e-ட்ரான் மாடலின் பேட்டரியை 20% முதல் 80% வரை வெறும் 26 நிமிடங்களில் இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் உள்ள எலெக்ட்ரிக் சார்ஜர்களைக் கொண்டு சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி வாடிக்கையாளர்களுக்கு இலவசம்:
எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்ய தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்தும் விதமாக, சோலார் பேனல்களும் இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் ஆடி எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே தங்களது எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிற எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் சார்ஜ் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆடி e-ட்ரான் வாடிக்கையாளர்கள் இந்த சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு ஸ்டார்பக்ஸ் கூப்பன்களையும் ஆடி இலவசமாக வழங்குகிறதாம்.