விலை குறைவான 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர்
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை முன்பை விட ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எலெட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வகையில் குறைந்த விலை கொண்ட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அடுத்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறிமுகப்படுத்தவிருக்கிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்ட ஏத்தர் நிறுவனம். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டேஷ்போர்டு எப்படி இருக்கும் என்பதனை அறிமுகப்படுத்தியிரக்கிறது ஏத்தர். தங்களது விலை கூடுலதான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இருந்து சில வசதிகளை நீக்கி, புதிய ஸ்கூட்டரை ஏத்தர் நிறுவனம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏத்தர் 450S: என்ன எதிர்பார்க்கலாம்?
450S எனப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, 450X-ன் டாப் ஸ்பீடான 90 கிமீ வேகத்தையே கொண்டிகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை விட 30கிமீ குறைவான ரேஞ்சைக் கொண்டு வெளியாரும் என்றும் அந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 450X-ஆனது 146 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கும் நிலையில், 450S-ஆனது 115 கிமீ ரேஞ்சை மட்டுமே கொண்டு வெளியாகவிருக்கிறது. புதிய ஸ்கூட்டரில், LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருந்தாலும், அதில் தொடுதிரை வசதி கொடுக்கப்படவில்லை. ரூ.1.3 லட்சம் அறிமுக விலையில் புதிய 450S எலெரக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஏத்தர். பேட்டரியும் 450X-ல் இருக்கும் 3.7kWh என்ற அளவை விடக் குறைவான அளவையே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.