புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் ஏத்தர் எனர்ஜி
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது பெங்களூருவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy). அந்த ஸ்கூட்டாரனது தற்போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது. ஸ்டைலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக வலம் வரும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். ஆனால், தற்போது குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறது ஏத்தர். ஸ்லிம்மாக இல்லாமல், சற்று பெரிதாக, நல்ல குஷனிங் கொண்ட சிங்கிள் பீஸ் சீட், அதிக இடவசதி கொண்ட பூட் மற்றும் பெரிய புட்ஃபோர்டுடன் காட்சியளிக்கிறது பெங்களூரு சாலைகளில் ஏத்தர் சோதனை செய்து வரும் புதிய ஸ்கூட்டர்.
ஏத்தரின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
பாக்ஸியான டிசைனுடன், எந்தவொரு டிசனை எலமண்ட்கள் ஏதுமின்றி இருப்பது போல் இருக்கிறது ஏத்தர் எனர்ஜியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஏத்தர் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேர்மாறான டிசனைக் கொண்டிருந்தாலும், அந்த 450 சீரிஸில் பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியையே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் ஏத்தர் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பட்ஜெட் கருதி ஏத்தர் 450 S மாடலில் கொடுக்கப்பட்ட வசதிகளையே புதிய ஸ்கூட்டரிலும் அந்நிறுவனம் கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ்ஸின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸூக்குப் போட்டியாக இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் உருவாக்கி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.