புதிய 'ஏத்தர் 450S' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஏத்தர் எனர்ஜி
இந்தியாவில் 'ஏத்தர் 450S' என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது, பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம். இத்துடன், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X-ன் இரண்டு அப்டேட்டட் வெர்ஷன்களையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஏத்தர் நிறுவனத்தின் புதிய அடிப்படை மாடலான 450S-ல், 2.9kWh பேட்டரியுடன் 115கிமீ ரேஞ்சு வழங்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 90கிமீ வேகத்தைக் கொண்டிருக்கும் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 40கிமீ வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிப்பிடிக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டிருக்கிறது. ரைடு அசிஸ்ட், ஏத்தர் பேட்டரி பாதுகாப்பு மற்றும் ஏத்தர் கனெக்ட் ஆகிய வசதிகள் அடங்கிய ப்ரோ பேக்கை ஆப்ஷனலாக அளித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையானது ரூ.1.30 லட்சத்தில் தொடங்குகிறது.
ஏத்தர் 450X: வசதிகள்
450S மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த அப்டேட் செய்யப்பட்ட 450X மாடலிலும் கொடுத்திருக்கிறது ஏத்தர் எனர்ஜி. மேலும், இந்த மாடலை, 2.9kWh பேட்டரியுடன் 115கிமீ ரேஞ்சு மற்றும் 3.7kWh பேட்டரியுடன் 145கிமீ ரேஞ்சு என இரண்டு வேரியன்ட்களாக அப்டேட் செய்திருக்கிறது அந்நிறுவனம். 450S மாடலுக்கு ஆப்ஷனலாகக் கொடுத்த ப்ரோ பேக்கை 450X மாடலுக்கும் ஆப்ஷனலாக அளித்திருக்கிறது ஏத்தர் எனர்ஜி நிறுவனம். 450S மாடலுக்கான ப்ரோ பேக்கை ரூ.14,000 கூடுதல் விலையிலும், 450X (2.9kWh) மாடலுக்கான ப்ரோ பேக்கை ரூ.16,000 கூடுதல் விலையிலும், 450X (3.7kWh) மாடலுக்கான ப்ரோ பேக்கை ரூ.23,000 கூடுதல் விலையிலும் வழங்குகிறது ஏத்தர். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து இதன் டெலிவரிக்களைத் துவக்கத் திட்டமிட்டிருக்கிறது ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.