விரைவில் புதிய 'ஏத்தர் 450 ஏபெக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர் எனர்ஜி
இந்தியாவில் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த டீசர் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா. தங்களது முந்தைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட அதிக வேகத்தைக் கொண்டிருக்கும் வகையில் இந்தப் புதிய ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறது ஏத்தர் எனர்ஜி. மேலும், இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 'ஏத்தர் 450 ஏபெக்ஸ்' (Ather 450 Apex) என்ற பெயரை அந்நிறுவனம் சூட்டியிருப்பதை காணொளி மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், வரும் வாரங்களில் இதன் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
ஏத்தர் 450 ஏபெக்ஸ்:
விரைவான முடுக்குதல் நேரம் மற்றும் வேகமான செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கிறது ஏத்தர். ஏத்தரின் முந்தைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 450X மாடலானது, அதிகபட்சமாக 90 கிமீ வேகத்திலும், 0-40 கிமீ வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் திறனையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஓலா S1 ப்ரோவுக்குப் போட்டியாக ஒரு லட்சம் ரூபாய்க்குள்ளான விலையிலேயே தங்களுடைய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது ஏத்தர் எனர்ஜி. ஏத்தரின் புதிய 450 ஏபெக்ஸ் குறித்த மேலதிக தகவல்களானது, வரும் வாரங்களில் அந்நிறுவனத்தால் பகிர்ந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது