'Car of the Year' விருதின் இறுதிக்கட்டப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஏழு கார்கள்
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஒரே ஒரு காருக்கு 'Car of the Year' (COTY) விருது வழங்கப்படும். 1964 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதின் 2024ம் ஆண்டுக்கான கார் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 2023ம் ஆண்டுக்கான COTY விருதை ஹூண்டாய் அயானிக் 6 மாடல் பெற்றிருக்கும் நிலையில், 2024ம் ஆண்டுக்கான COTY விருதுக்கு போட்டியிட்ட 28 கார்களிலிருந்து 7 கார்கள் இறுதிக்கட்டப் பரிந்துரைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஏழு கார்களில், ஒரே ஒரு கார் மட்டும் 2024ம் ஆண்டுக்கான COTY விருதைப் பெற தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறது. அந்த முடிவானது, அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கள்:
2024ம் ஆண்டுக்கான COTY விருதின் இறுதிக்கட்டப் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு கார்கள்: ப்யூகாட் e-3008, வால்வோ EX30, ரெனோ சீனிக், கியா EV9, BYD சீல், BMW 5 சீரிஸ் மற்றும் டொயோட்டா CH-R. உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 59 நடுவர்கள் குழுவானது இந்த ஏழு கார்களை இறதிக்கட்டப் பரிந்துரைக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. மேற்கூறிய கார்களின் நிறுவனங்களில், ப்யூகாட், வால்வோ, ரெனோ, டொயோட்டா மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் முன்னரே தங்களுடைய பிற கார்களுக்காக COTY விருதுகளை வென்றிருக்கின்றன. BMW நிறுவனம் இதுவரை ஒருமுறை கூட COTY விருதை வென்றிருக்காத நிலையில், BYD நிறுவனம் முதன்முறையாக COTY விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ப்யூகாட்டின் e-3008 மாடலே இம்முறை விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.