"இனிமே கை வலிக்காது..." புதிய அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் வெளியான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350
செய்தி முன்னோட்டம்
இந்திய இரு சக்கர வாகன சந்தையில் அசைக்க முடியாத நன்மதிப்பைப் பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது அதிகம் விற்பனையாகும் மாடலான கிளாசிக் 350 பைக்கை இரண்டு மிக முக்கியமான புதிய அப்டேட்களுடன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் நகரப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் வசதிக்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.95 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்
ஓட்டுதலை எளிதாக்கும் புதிய 'அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச்'
இந்த 2026 மாடலின் மிக முக்கியமான மாற்றமாக 'அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்' (Assist and Slipper Clutch) தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது பைக் ஓட்டுநர்கள் கிளட்ச் லீவரை மிக எளிதாகவும் குறைந்த எஃபோர்ட் போட்டும் அழுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளில் நாள் முழுவதும் பயணித்தாலும் கைகளில் சோர்வோ வலியோ ஏற்படாது.
மேலும், அதிவேகமாகச் செல்லும்போது கியர்களை திடீரெனக் குறைத்தால் வழக்கமாக ஏற்படும் பின்சக்கரத் தடுமாற்றம் இதில் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, வளைவுகளிலும் மேடுபள்ளங்களிலும் பைக் சிறந்த கட்டுப்பாட்டுடன் இயங்கும்.
டைப்-சி சார்ஜிங் போர்ட்
அதிவேக யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வசதி
அடுத்த முக்கிய மாற்றமாக, ஏற்கனவே கிளாசிக் 350 பைக்கில் இருந்த வழக்கமான யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டிற்குப் பதிலாக தற்பொழுது மேம்படுத்தப்பட்ட வேகமான யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரப் பயணங்களின் போது மொபைல் போனை நேவிகேஷனுக்காகப் பயன்படுத்தும் ரைடர்களுக்கு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களை மிக விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும்.
புதிய அப்டேட்கள்
எந்தெந்த வேரியண்ட்டுகளில் இந்த புதிய அப்டேட்கள் கிடைக்கும்?
வாடிக்கையாளர்கள் பைக் புக் செய்வதற்கு முன்பாக வேரியண்ட்டுகளின் விபரங்களைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
ஏனெனில் இந்த இரண்டு புதிய அம்சங்களும் டூயல்-சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப விலை 1.95 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்கி, எமரால்டு கிரீன் நிறத்திற்கு 2.24 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், இதன் ஆரம்ப நிலை மாடலான சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் கொண்ட 'ரெட்டிச் ரெட்' (Redditch Red) வேரியண்ட் 1.87 லட்சம் ரூபாய்க்கு எவ்வித மாற்றமுமின்றிப் பழைய தொழில்நுட்பத்துடனேயே தொடர்கிறது.
மேலும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக ஹால்சியன் பிளாக் மற்றும் ஜோத்பூர் ப்ளூ ஆகிய நிறங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன.
என்ஜின்
என்ஜின் மற்றும் பிற கட்டமைப்புகளில் மாற்றமில்லை
புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் கட்டமைப்பில் ராயல் என்ஃபீல்டு எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
இது வழக்கம்போல அதே 349சிசி ஜே-சீரிஸ் ஒற்றை சிலிண்டர் எஞ்சினையே கொண்டுள்ளது.
இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியது. எனவே பைக்கின் செயல்திறன் மற்றும் ஓட்டுதல் தரம் அதன் பாரம்பரியத் தன்மையிலேயே நீடிக்கிறது.
தொழில்நுட்பம்
புல்லட் 350 பைக்கிற்கு மட்டுமே இல்லாத தொழில்நுட்பம்
இந்த புதிய அப்டேட் மூலம், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி பிரிவில் உள்ள ஹண்டர் 350, மீட்டியோர் 350 மற்றும் கோவன் கிளாசிக் 350 ஆகிய பைக்குகளின் வரிசையில் தற்பொழுது கிளாசிக் 350 மாடலும் அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் வசதியைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, தற்போதைய நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி தயாரிப்புகளில் இந்த நவீன கிளட்ச் வசதி இல்லாத ஒரே ஒரு பைக்காக புல்லட் 350 மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.