மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங்
சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக இன்று(மார் 10) பதவியேற்றார். இந்த பதவியேற்பின் மூலம், ஜி ஜின்பிங் சீனாவின் மிக சக்திவாய்ந்த தலைவராக மாறியுள்ளார். கடந்த அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்(CCP) தலைவராக ஜி ஜின்பிங் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பதவியேற்றதை அடுத்து, சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தின் நியமனம் தற்போது வந்துள்ளது. கடந்த அக்டோபரில் இருந்து, 69 வயதான ஜி ஜின்பிங் தனது 'பூஜ்ஜிய-கோவிட் கொள்கை' காரணமாக மக்களின் பெரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார். வெள்ளியன்று, பிரதிநிதிகள், மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங்கை சீனாவின் அதிபராக தேர்தெடுத்தனர். மேலும், வாக்கெடுப்பில் ஒருமனதாக அவர் நாட்டின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.
உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர் ஜி ஜின்பிங்
அவரின் இந்த பதவியேற்பு, அவரை கம்யூனிஸ்ட் சீனாவின் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபராக மாற்றுகிறது. இதன்பிறகு, இவருக்கு இணையான போட்டியாளர்கள் யாரும் வரவில்லை என்றால் இவர் தனது எழுபது வயதுகளிலும் தொடர்ந்து ஆட்சி செய்வார் என்று கூறப்படுகிறது. "ஜி ஜின்பிங்: தி மோஸ்ட் பவர்ஃபுல் மேன் இன் தி வேர்ல்ட்" என்ற புத்தகத்தின் இணை ஆசிரியரான அட்ரியன் கீஜஸ், ஜி ஜின்பிங்கிடம் அதிகமான குடும்ப சொத்துக்கள் இருப்பதால், அவருடைய குறிக்கோள் பணமல்ல என்று கூறியுள்ளார். "அவருக்கு உண்மையில் சீனாவைப் பற்றி ஒரு கனவு இருக்கிறது. அவர் சீனாவை உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாகப் மாற்ற விரும்புகிறார்." என்று அவர் மேலும் கூறி இருக்கிறார்.