உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: "நமது அத்தியாவசிய தேவை உணவு; புகையிலை அல்ல"
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் 31 மே 2023 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்திற்கான இந்த வருட கருப்பொருள் "நமக்கு உணவு தேவை, புகையிலை அல்ல" என்பதாகும். அதாவது புகையிலையை விவசாயிகள் தவிர்த்து மாற்று பயிர் உற்பத்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது புகையிலை தொழில்துறையை முற்றிலுமாக முடக்கும் முயற்சிகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், புகையிலை வளர்ச்சி மற்றும் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்துகிறது. அறிக்கையின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 மில்லியன் ஹெக்டேர் நிலம் புகையிலை சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023
புகையிலையை வளர்ப்பது ஆண்டுக்கு 2,00,000 ஹெக்டேர் காடழிப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் புகையிலையை வளர்ப்பதற்கு பூச்சிக்கொல்லிகள் & உரங்களின் அதிக பயன்பாடு தேவைப்படுகிறது. இது மண் சிதைவை ஏற்படுத்தி மண்ணின் வளத்தை குறைக்கிறது. புகையிலை பயிரிடுவதால் கிடைக்கும் எந்த லாபமும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் நிலையான உணவு உற்பத்திக்கு ஏற்படுத்தும் சேதத்தை ஈடுகட்டாது. அதனால் புகையிலை உற்பத்தியைக் குறைப்பதற்கும், உணவுப் பயிர்களின் உற்பத்தியில் விவசாயிகளை முன்னேற்றுவதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பூச்சிக்கொல்லிகள், நச்சு இரசாயனங்களை கையாளுவது விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உடல்நலக்குறைவிற்கு காரணமாகிறது. புகையிலை நிறுவனங்களுடனான நியாயமற்ற ஒப்பந்தங்கள் விவசாயிகளை ஏழ்மையில் ஆழ்த்துகின்றன. அதனால் உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி நாட்டின் வளம் காக்க வேண்டும்.