இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண்
இங்கிலாந்தில் ஒரு பெண் தனது சகோதரிக்கு தனது கருப்பையை தானமாக வழங்கியுள்ளார். இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, இது இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை என்ற பெயரை பெற்றுள்ளது. தானம் செய்த பெண்ணுக்கு 40 வயதாகிறது. மேலும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றன. அதனால், தன் சகோதரிக்கு தனது கருப்பையை வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனது சகோதரிக்கு கருப்பை வளர்ச்சியடையாத நிலை இருந்து வந்ததால், அவர் தனது கருப்பையை வழங்கி இருக்கிறார்.
இரண்டு அறுவை சிகிச்சை அறைகளில் 30 பேர் கொண்ட குழு பணி புரிந்தது
இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை ஆக்ஸ்போர்டில் உள்ள சர்ச்சில் மருத்துவமனையில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக கூறப்படுகிறது. கருப்பையை பெற்றவர் 34 வயதான ஒரு திருமணமான பெண் ஆவார். அந்த பெண்ணின் கருப்பை வளர்ச்சியடையாத நிலை இருந்து வந்ததால், அவரால் இத்தனை நாட்களாக கருவுற முடியவில்லை. இந்நிலையில், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிபெற்றதை அடுத்து, தான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வானில் பறக்கும் அளவு சந்தோசமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு அறுவை சிகிச்சை அறைகளில் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு, 30 பேர் அடங்கிய 2 குழுக்கள் பணி புரிந்தன.