
நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO
செய்தி முன்னோட்டம்
2022ஆம் ஆண்டில் இருமல் மருந்துகளால் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு(WHO) குழந்தைகள் இறப்புக்கு காரணமாக இருந்த நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், இந்த ஐநா சுகாதார நிறுவனம் மூன்று உலகளாவிய மருத்துவ எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளுக்கு எதிராக "உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை" வலியுறுத்தியுள்ளது.
நேற்று(ஜன 23) WHO ஒரு அறிக்கையில், காம்பியா, இந்தோனேஷியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்(முக்கியமாக 5 வயதுக்குட்பட்டவர்கள்) கடுமையான சிறுநீரகக் பாதிப்பால் உயிரிழந்தனர். இதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளே காரணம் என்று தெரிவித்திருக்கிறது.
WHO
194 உலக நாடுகளுக்கு அழைப்பு
இந்த மருந்துகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ், திமோர் லெஸ்டே, செனகல் மற்றும் கம்போடியாவில் இந்த மருந்துகள் தற்போதும் விற்பனையில் இருப்பதால், அந்த நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் WHO கூறியுள்ளது.
மேலும், இதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க அதன் உறுப்பினர்களான 194 நாடுகளில் நடவடிக்கை எடுக்க அந்த நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"இது தனிப்பட்ட ஒரு பிரச்சனை அல்ல என்பதால், மருத்துவ விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு முக்கிய நாடுகளை உடனடி நடவடிக்கை எடுக்குமாறு WHO அழைப்பு விடுக்கிறது" என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதற்காக 3 எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ள WHO, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறது.