இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை
உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேசியாவில் விநியோகிப்பட்ட இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமாக இருப்பது கண்டுபிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள QP பார்மேசம் மற்றும் டிரில்லியம் பார்மா ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இந்த மருந்துகளின் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இந்த மருந்துகளால் இறப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
மருந்தின் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை: WHO
அசுத்தங்கள் அதிக அளவில் இருப்பதால், இந்த மருந்துகள் பாதுகாப்பற்றது என்றும் முக்கியமாக இவை குழந்தைகளுக்கு ஆபத்தானவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. "இதை உட்கொள்வதால் மரணம் கூட ஏற்படலாம்" என்று WHO கூறி இருக்கிறது. WHO வெளியிட்ட எச்சரிக்கையில், இந்த மருந்துகளின் உற்பத்தியாளர் QP பார்மேசம் என்றும் இதன் விளம்பரதாரர் ஹரியானாவில் உள்ள டிரில்லியம் பார்மா என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து அதன் உற்பத்தியாளரோ அல்லது விற்பனையாளரோ உத்தரவாதம் அளிக்கவில்லை என்று WHO கூறி இருக்கிறது.