ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக 1,300-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளது: WHO
செய்தி முன்னோட்டம்
ஐரோப்பா தற்போது முன்னெப்போதும் இல்லாத கோடைக்காலத்தின் தொடக்ககால வெப்ப அலையை சந்தித்து வருகிறது. ஜூன் 21 முதல் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகளுக்கு இது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "வெப்ப அழுத்தம் பெரும்பாலும் 'மௌனக் கொலையாளி' என்று அழைக்கப்படுகிறது" என எச்சரித்ததோடு, ஐரோப்பிய உள்கட்டமைப்பு இத்தகைய கடுமையான வெப்பநிலைகளைத் தாங்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்றும் கூறினார். இந்த வெப்ப அலை ஏற்கனவே ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் வெப்பநிலை சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரான்சின் உயிரிழப்பு
பிரான்சில் அவசர அழைப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்
பிரான்சில், புதன்கிழமை முதல் எதிர்பார்த்ததை விட சுமார் 1,000 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்ததை தொடர்ந்து, இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே நிகழ்ந்துள்ளன. மேலும் , அந்நாட்டின் வெப்பமான நாட்களில் அவசர அழைப்புகளின் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்தது.
உச்சங்கள்
ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் சாதனை வெப்பநிலை
ஜெர்மனியின் கிழக்கு பிராண்டன்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை 41.7°C வெப்பநிலை பதிவானது, இது அந்நாட்டின் மிக வெப்பமான நாளாகும். இது ஒரு நாள் முன்னதாக பதிவான முந்தைய சாதனையை முறியடித்தது. போலந்தில், ஸ்லுபிஸ் பகுதியில் 40.5°C என்ற வரலாறு காணாத உச்சபட்ச வெப்பநிலை பதிவானது, அதே நேரத்தில் செக் குடியரசில் பிராகாவிற்கு அருகிலுள்ள டோக்சானியில் 41.1°C வெப்பநிலை காணப்பட்டது. இந்த சாதனைகளுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று டெட்ரோஸ் கூறினார். இது, "ஒரு தலைமுறைக்கு ஒருமுறை" நிகழும் வெப்ப அலைகளை ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் நிகழும் நிகழ்வுகளாக மாற்றி வருகிறது.
நடவடிக்கை
வெப்ப அலையை எதிர்த்துப் போராட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கின்றனர்
கடுமையான வானிலை, ஐரோப்பிய அதிகாரிகளைக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்தித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக 'ரெட் கோட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், நெதர்லாந்தின் டெஃப்கான்.1 இசை விழா ரத்து செய்யப்பட்டது. பாரிஸில், அவசரகால சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், அதிகாரிகள் பார்சல் மதுபானங்களை பொது இடங்களில் அருந்துவதற்கு தடை விதித்ததுடன், நகரின் PRIDE அணிவகுப்பையும் ரத்து செய்தனர். இந்த வெப்ப அலை ஐரோப்பா முழுவதும் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியுள்ளது. ஜெர்மனியில், அதிக வெப்பநிலை காரணமாக நெடுஞ்சாலைகளின் கான்கிரீட் பரப்புகள் உடைந்துள்ளன. வெப்ப சேதத்தால் தண்டவாளங்களும் இணைப்பு முனைகளும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிராம் சேவைகள் நிறுத்தப்பட்டதால், லீப்ஜிக்கின் பொதுப் போக்குவரத்து அமைப்பு தடைபட்டது. கடுமையான வானிலை காரணமாக ஜெர்மனியில் காட்டுத்தீயும் பரவியுள்ளது.