கட்சி அலுவலகத்திலேயே சோகம்! தற்கொலைக் குறிப்புடன் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் துணை சபாநாயகரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசீஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கு அருகில் அமைந்த கட்சி அலுவலகத்திலேயே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் எவ்வித ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும், தனது நேர்மை குறித்து விளக்கம் அளித்தும் அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நான் ஊழல்வாதி அல்ல
தற்கொலைக் கடிதத்தில் உருக்கமான வரிகள்
கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என அசீஷ் பானர்ஜி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தாராபித் ராம்பூர்ஹாட் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியபோது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
ஒப்பந்தப் புள்ளிகள், காசோலைகள் வழங்குதல் அல்லது அனுமதி சான்றிதழ்கள் வழங்குவதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், தன்னை அவமானப்படுத்தவே முயற்சி நடப்பதாகவும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கால் நூற்றாண்டு அரசியல்
25 ஆண்டுகால அரசியல் பயணமும் தற்கொலைக்கான பின்னணியும்
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 25 ஆண்டுகள் ராம்பூர்ஹாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அசீஷ் பானர்ஜி வெற்றி பெற்றுப் பணியாற்றியுள்ளார்.
இருப்பினும், நடைபெற்ற 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரிடம் அவர் தோல்வியடைந்தார்.
தேர்தலில் சந்தித்த தோல்விக்குப் பிறகு, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார் எனத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சோகம்
சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மறுநாளே நேர்ந்த சோகம்
தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் நடைபெற்ற உள்ளூர் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அசீஷ் பானர்ஜி, அங்குத் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
அதன் மறுநாளே அவர் தற்கொலை செய்துகொண்டது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே நடந்த சில தவறான விஷயங்களை எதிர்த்துத் தன்னால் எப்போதும் குரல் கொடுக்க முடியாமல் போனதாகவும், அரசியலுக்கு வந்ததே தவறு என்றும் தனது கடைசி கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
விசாரணை
காவல் துறையினரின் தீவிர விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை
அசீஷ் பானர்ஜியின் மறைவு குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது உடலைக் கைப்பற்றிய காவலர்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது இந்த திடீர் மறைவு, மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், அவரது தற்கொலைக்கான முழுமையான காரணங்களை அறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.