Loading...
2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும்! சுதந்திர தின உரையில் பிரம்மாண்ட திறமை தேடல் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி
சுதந்திர தின உரையில் 2036 ஒலிம்பிற்கான பிரம்மாண்ட திறமை தேடல் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி

2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும்! சுதந்திர தின உரையில் பிரம்மாண்ட திறமை தேடல் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
10:18 am

செய்தி முன்னோட்டம்

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையில் இந்தியா அடைய வேண்டிய முக்கிய இலக்குகளைத் தெளிவுபடுத்தினார். குறிப்பாக, 2036 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதை ஒரு முக்கிய லட்சியமாக இந்தியா கொண்டுள்ளது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகப் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

புதிய விளையாட்டுகள்

புதிய விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவின் பங்கேற்பு

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, தற்போதைய நிலையில் ஒலிம்பிக்கில் உள்ள மொத்தப் பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்கு போட்டிகளில் இந்தியா தகுதி பெற முடியாமல் இருப்பது வேதனையளிப்பதாகக் கூறினார்.

எனவே, 2036 ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தது நான்கில் மூன்று பங்கு போட்டிகளிலாவது இந்தியா போட்டியிட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியா இதுவரை பங்கேற்காத புதிய விளையாட்டுப் பிரிவுகளில் சிறப்பு கவனம் செலுத்தி, வீரர்களைத் தகுதிபெற வைக்கத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் தீவிரமாக அளிக்கப்படும் என்றார்.

திறமை தேடல்

5 முதல் 15 வயது சிறுவர்களுக்கான நாடு தழுவிய திறமை தேடல்

விளையாட்டுத் துறை இலக்குகளை அடைவதற்காக நாடு தழுவிய அளவிலான பிரம்மாண்ட திறமை தேடல் (Nationwide Talent Hunt) திட்டம் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் விளையாட்டுத் திறமை கண்டறியப்படும்.

திறமையான சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகள், உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் மற்றும் சிறப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

மேலும் 2030ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா, 2036 ஒலிம்பிக்கிலும் வலுவான போட்டியாளராக உருவெடுக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

ADVERTISEMENT