LOADING...
டெல்சி ரோட்ரிக்ஸ்: மதுரோவின் 'புலி' இப்போது வெனிசுலாவின் தற்காலிக அதிபர்; யார் இவர்?
மதுரோவின் 'புலி' டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் தற்காலிக அதிபராக நியமனம்

டெல்சி ரோட்ரிக்ஸ்: மதுரோவின் 'புலி' இப்போது வெனிசுலாவின் தற்காலிக அதிபர்; யார் இவர்?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 04, 2026
10:34 am

செய்தி முன்னோட்டம்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை தற்காலிக அதிபராக நியமித்துள்ளது. மதுரோவால் புலி என்று வர்ணிக்கப்பட்ட இவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் இதோ:- 56 வயதான டெல்சி, 1969இல் கராகஸில் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் ஒரு இடதுசாரி போராளி மற்றும் லிகா சோசலிஸ்டா கட்சியின் நிறுவனர் ஆவார். இவர் ஒரு வழக்கறிஞர். வெனிசுலா மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளில் அரசியலில் மிக வேகமாக உயர்ந்தார். மதுரோவின் சோசலிசக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்ததால், மதுரோ இவரைத் தனது புலி என்று பெருமையாக அழைத்தார்.

வகித்த பதவிகள்

வெனிசுலாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணி

டெல்சி ரோட்ரிக்ஸ் ஜூன் 2018 முதல் துணை அதிபராகப் பணியாற்றி வருகிறார். தற்காலிக அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர் துணை அதிபர் பதவியுடன் சேர்த்து நிதியமைச்சர் மற்றும் எண்ணெய் துறை அமைச்சர் ஆகிய பதவிகளையும் கவனித்து வந்தார். 2013-2014இல் தகவல் மற்றும் தொடர்பு அமைச்சராகவும், 2014-2017இல் வெளியுறவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தற்போதைய சவால்கள்

டெல்சி ரோட்ரிக்ஸின் தற்போதய சவால்கள்

வெனிசுலாவின் எண்ணெய் துறை மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்கும் முக்கியப் பொறுப்பு இவருக்கு இருந்தது. அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் ஒரு தற்காலிக நிர்வாகத்தை அமைப்பதாகக் கூறியுள்ள நிலையில், வெனிசுலா உச்ச நீதிமன்றம் டெல்சியை அதிபராக அறிவித்துள்ளது. இதனால் அந்நாட்டில் அதிகாரப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. மதுரோவின் ஆட்சிக் காலத்தில் மிக நெருக்கமான அதிகார மையமாக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், தற்போது வெனிசுலாவின் இறையாண்மையைக் காக்க வேண்டிய மிக நெருக்கடியான கட்டத்தில் உள்ளார்.

Advertisement