அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 200 இந்தியர்கள்: சல்மான்கான் வழக்கில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோயும் அதில் அடக்கம்
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோதமாக குடியேறிய 197 பேர் மற்றும் சில முக்கிய குற்றவாளிகள் உட்பட மொத்தம் 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இந்த விமானம் புதன்கிழமை (நவம்பர் 19, 2025) டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. இந்த நாடு கடத்தல் நடவடிக்கையில், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் இளைய சகோதரரும், பல்வேறு உயர்மட்டக் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவருமான அன்மோல் பிஷ்னோயும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்.
குற்றச்சாட்டுகள்
அன்மோல் பிஷ்னோய் மீதான குற்றச்சாட்டுகள்
அன்மோல் பிஷ்னோய், முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கி படுகொலை வழக்கு, நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கு உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார். பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, 2022 ஏப்ரலில், அன்மோல் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையில் போலி ரஷ்ய ஆவணங்களை பயன்படுத்தி அன்மோல் நடமாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் அவர் பிடிபட்டு, பின்னர் எலக்ட்ரானிக் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை
காவலில் எடுக்க விசாரணை அமைப்புகள் மும்முரம்
அன்மோல் பிஷ்னோய் இந்தியாவுக்கு வந்தவுடன், முதலில் அவரை காவலில் எடுப்பது எந்த அமைப்பின் பொறுப்பு என்று மத்திய அரசு முடிவு செய்யும். பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) முதன்மை காவலுக்கான வலுவான வாய்ப்பாக கருதப்படுகிறது. அன்மோலை நாடு கடத்த கோரி மும்பை காவல்துறை ஏற்கனவே இரண்டு தனித்தனி கோரிக்கைகளை அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொடர்ச்சியான வலியுறுத்தலின் பேரிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.