பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு விற்பனை!
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு பாகிஸ்தான் மக்கள் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலாவி வருகின்றன. பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாததால், மக்கள் எல்பிஜியை(LPG) சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. DW.com வெளியிட்ட செய்தியின் படி, இந்த பிளாஸ்டிக் பைகள் நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் நிரப்பப்படுகின்றன. கசிவைத் தவிர்க்க, விற்பனையாளர்கள் பையின் ஓட்டையை வால்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர்.
சிலிண்டர் விலை உயர்வால் சிரமப்படும் மக்கள்:
இந்த பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றன. அதன் பின், மக்கள் இதை ஒரு சிறிய உறிஞ்சும் மின்சார பம்ப் மூலம் பயன்படுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ எரிவாயுவை நிரப்ப தோராயமாக ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஒரு ஏழை குடிமகன் "சிலிண்டர் வெடிக்கும் விபத்துகளைப் பற்றிய எச்சரிக்கை இருக்கிறது. ஆனால், அப்படி எதுவும் நடந்தாக கேள்வி படவில்லை. மேலும், அப்படியே நடந்தாலும் சிலிண்டர்கள் விலை உயர்வால் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்." என்று DW.com செய்திகளுக்கு கூறி இருக்கிறார்.