LOADING...
உலகையே உலுக்கிய அதிரடி! வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

உலகையே உலுக்கிய அதிரடி! வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
04:23 pm

செய்தி முன்னோட்டம்

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் சிறைபிடிக்கப்பட்டு, வெனிசுலாவிலிருந்து விமானம் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்

தாக்குதலின் விவரங்கள்

உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 3) அதிகாலை 2 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின. வெனிசுலா தலைநகர் கராகஸில் மட்டும் குறைந்தது ஏழு இடங்களில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. நகரின் ராணுவ நிலைகள் மற்றும் ஹேங்கர்கள் மீது குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல் காரணமாகப் பல ராணுவ நிலைகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ, இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும், வெளிநாட்டுப் படைகளின் ஊடுருவலை வெனிசுலா ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கவனம்

உலக நாடுகளின் கவனம்

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், வெனிசுலாவின் வான்பரப்பிற்குள் வணிக ரீதியான விமானங்கள் செல்வதற்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை வழங்குவதற்காக புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார். சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், வெனிசுலாவின் எதிர்காலத்தை ஒரு புதிய திசைக்கு இட்டுச் சென்றுள்ளது.

Advertisement