வெனிசுலாவில் மீண்டும் தொடர் நிலநடுக்கம்: 920 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, மீட்புப் பணியில் தொய்வு
செய்தி முன்னோட்டம்
பேரழிவை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவான மற்றுமொரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் மரகாய் (Maracay) நகரில் இருந்து வடமேற்கே 61 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் பலத்த அதிர்வுகள் மரகாய் மற்றும் தலைநகர் கராகஸ் ஆகிய இரு முக்கிய நகரங்களிலும் உணரப்பட்டதால், ஏற்கனவே அச்சத்தில் உறைந்து போயிருக்கும் பொதுமக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர்.
உடல்கள் மீட்பு
920 ஆக எகிறிய பலி எண்ணிக்கை
கடந்த புதன்கிழமை மாலை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்படுத்திய உள்கட்டமைப்புச் சிதைவுகளில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 920 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும் 3,300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரத்தைக் கடந்துவிட்டதால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மனிதர்களை உயிருடன் மீட்பதற்கான நேரம் குறைந்து வருவது உறவினர்களிடையே பெரும் ஏக்பபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
அரசு உதவி வரவில்லை எனப் பொதுமக்கள் குமுறல்
பாதிப்புகள் மிகத் தீவிரமாக உள்ள கிராமப்புற மற்றும் நகர எல்லைப் பகுதிகளில் அரசாங்கத்தின் முறையான மீட்புக் குழுக்கள் இன்னும் வந்து சேரவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களது வெறும் கைகளாலும், எளிய கருவிகளாலும் மக்கள் இடிபாடுகளைத் தோண்டித் தங்கள் குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர். ஆனால், இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தங்களது நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா பிராந்தியம் முழுமையாக ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
உலக நாடுகள்
உலக நாடுகளின் அவசரக் கால மனிதாபிமான உதவிகள்
வெனிசுலாவின் இந்த இமாலயப் பேரிடரைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுக்கள் மற்றும் மருத்துவப் பிரிவினர் தற்பொழுது வெனிசுலாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், தற்பொழுது ஏற்பட்டுள்ள புதிய நில அதிர்வுகள் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, சர்வதேசக் குழுக்களின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பெரும் தொய்வைச் சந்தித்துள்ளன.