அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே?
அமெரிக்காவில் 'பாம்ப் சூறாவளி' என்ற பனிப்புயல் நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தற்போதைய வெப்பநிலை சுமார் -48 டிகிரி செல்சியஸ் இருப்பதால், வெந்நீர் வைத்தால் கூட அது விரைவில் உறைந்து விடுகிறதாம். பொதுவாக, இந்த கால கட்டங்களில் தெற்கு அமெரிக்கா இயல்பான வெப்பநிலையில் தான் இருக்கும். வட அமெரிக்காவில் மட்டுமே பனி பொழிவு ஏற்படும். ஆனால், இந்த வருடம் நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, 5000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7600 விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க நாட்டின் பல இடங்களில் விபத்துகளும் மனித இழப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
மின்சாரம் இல்லாமல் வீட்டுக்குள் பதுங்கும் மக்கள்!
கடும் காற்றாலும் பனி பொழிவாலும் மின் கம்பங்கள் பல இடங்களில் உடைந்து விழுந்ததால் மின்சாரம் இல்லாமல் பலர் சிரமப்படுகின்றனர். பொதுவாக, கடும் குளிரை சமாளிக்க அறைகளை இதமாக்கும் ரூம் வாமர்களை இது போன்ற நாடுகளில் வைத்திருப்பார்கள். ரூம் வாமர்கள், வாட்டர் ஹீட்டர்கள் போன்ற சாதனங்கள் இல்லையென்றால் குளிரிலேயே உறைந்துவிடும் நிலைக் கூட வரலாம். அப்படி இருக்கையில், வாஷிங்டனில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஓஹியோ என்ற மாகாணத்தில் சுமார் 5,50,000 வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின்சாரம் இல்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், மெக்ஸிகோவில் இருந்து புலப்பெயர்ந்தவர்கள் பலர் செல்வதற்கு இடம் இல்லாமல் ரோடுகளிலும் பொது கட்டிடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.