LOADING...
அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு; ஒருவர் கைது
அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்

அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு; ஒருவர் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Jan 05, 2026
05:56 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.டி.வேன்ஸின் சின்சினாட்டி நகரில் உள்ள இல்லத்தில், இன்று (ஜனவரி 5) அதிகாலை ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். ஜனவரி 5 அதிகாலை சுமார் 12:15 மணியளவில், துணை அதிபர் வேன்ஸின் ஓஹியோ மாகாண இல்லத்தில் ஒரு நபர் அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது. அந்த நபர் வீட்டின் ஜன்னல்களைத் தாக்கி உடைத்துள்ளார். மேலும், அந்தப் பகுதியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது

சதேகத்திற்குரிய நபர் கைது

ஜே.டி.வேன்ஸ் இல்லத்தின் பாதுகாப்பிலிருந்த ரகசிய சேவை ஏஜெண்டுகள், மர்ம நபர் ஒருவர் கிழக்கு நோக்கித் தப்பி ஓடுவதைக் கண்டு உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி, சந்தேகத்திற்குரிய ஒரு நபரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் அந்த இல்லத்தில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேன்ஸ் கடந்த ஞாயிறு மதியமே அங்கிருந்து கிளம்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் வாஷிங்டன் டிசியில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.

விசாரணை

தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணை

தற்போது சின்சினாட்டி போலீசார் மற்றும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் இணைந்து இந்தத் தாக்குதல் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது தற்செயலாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்த நிலையில், துணை அதிபர் இல்லத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதற்கும் அந்த விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.

Advertisement