திடீரென இந்திய வரைபடத்தை தனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கியது அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR), இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது பயன்படுத்திய சர்ச்சைக்குரிய இந்திய வரைபடத்தை தற்போது தனது அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கியுள்ளது. அந்த வரைபடத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அட்சாய் சின் (Aksai Chin) ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக காட்டப்பட்டிருந்தது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. வழக்கமாக அமெரிக்கா வெளியிடும் வரைபடங்களில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் சர்ச்சைக்குரிய இடங்களாகவே குறிக்கப்படும். ஆனால், கடந்த வாரம் வெளியிடப்பட்ட வரைபடத்தில் எல்லைக் கோடுகள் இன்றி அந்த பகுதிகள் முழுமையாக இந்தியாவிற்குள் காட்டப்பட்டிருந்தன. இது வாஷிங்டனின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றமா அல்லது கவனக்குறைவா என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த பதிவையே அமெரிக்கா நீக்கியுள்ளது.
உறவு
வர்த்தக உறவில் முன்னேற்றம்
இந்த வரைபட சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருகிறது. குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த 50 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க இரு நாடுகளும் அண்மையில் சம்மதித்துள்ளன. இது ஆசிய நாடுகளிலேயே மிகக்குறைந்த வரி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைப்பாடு
இந்தியாவின் நிலைப்பாடு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை சர்வதேச அமைப்புகள் தவறாகச் சித்தரிப்பதற்கு இந்தியா தொடர்ந்து தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்தியாவின் இறையாண்மை தொடர்பான வரைபடங்களில் துல்லியமான எல்லைகள் இடம்பெற வேண்டும் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த 'யூ-டர்ன்' நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.