எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா
இந்தியாவுக்கான அடுத்த தூதராக எரிக் கார்செட்டியை நியமிக்க அமெரிக்க செனட் இன்று(மார் 15) வாக்களிக்கவுள்ளது. எரிக் கார்செட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராக இருந்தபோது, அவரது ஊழியர் ஒருவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில் செனட் தலைவர் சக் ஷுமர் இதை அறிவித்திருக்கிறார். செனட் மூலம் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டால், கார்செட்டி விரைவிலேயே இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பதவியேற்பார். இந்த பதவி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு அவரது வேட்புமனு மீதான இறுதி வாக்கெடுப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
செனட் வெளியுறவுக் குழுவின் வாக்கெடுப்பு
கார்செட்டியின் நியமனம் ஜூலை 2021 முதல் அமெரிக்க காங்கிரஸில் நிலுவையில் உள்ளது. அவர் ஜனாதிபதி ஜோ பைடனால் மதிப்புமிக்க இந்த இராஜதந்திர பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடந்த வாரம், செனட் வெளியுறவுக் குழு, அதன் வணிகக் கூட்டத்தில், கார்செட்டியின் நியமனத்திற்கு ஆதரவாக 13-8 என்ற விகிதத்தில் வாக்களித்தது. இதற்கு முன், இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜனவரி 2021 இல் பதவி விலகினார். இந்த நியமன வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய, US இந்திய வியூக மற்றும் கூட்டாண்மை மன்றதின்(USISPF) தலைவரான முகேஷ் அகி, இந்தியாவுக்கு இறுதியாக ஒரு தூதர் கிடைக்கப்போகிறார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.