அமெரிக்கா - சவூதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்: பல பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்து
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இக்கூட்டண்மை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பொருளாதார மற்றும் மூலோபாய உறவை மேலும் வலுப்படுத்தும் சட்டப் பூர்வ அடித்தளமாக அமையும் எனக் கருதப்படுகிறது. வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் மற்றும் சவூதி அரேபிய எரிசக்தித் துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜீஸ் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். சவூதி அரேபியாவில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்புடன் அணுமின் நிலையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையங்களுக்கான ஆற்றல் கட்டமைப்புகளை உருவாக்க வழிவகை செய்யப்படும். கூட்டு ஆய்வுகளுக்குப் பிறகு, சவூதி மண்ணிலேயே யுரேனியம் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான வாய்ப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவரங்கள்
அணுப்பெருக்கக் கவலைகளும், அமெரிக்காவின் விளக்கமும்
ஈரானுடன் பதற்றம் நிலவி வரும் சூழலில் சவூதிக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்குவது பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டியை தூண்டக்கூடும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் சிலர் கவலை தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சீனா அல்லது ரஷ்யாவுடன் சவூதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தங்களை மேற்கொள்வதைத் தடுக்கவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
"இந்த ஒப்பந்தங்கள் மிக உயர்ந்த அணுசக்தி பாதுகாப்பு தரநிலைகளைப் பேணுகின்றன. அமெரிக்காவின் உயர்தரத் தொழில்நுட்பம் மூலம் நமது வர்த்தக உறவுகளையும், சர்வதேச பாதுகாப்பையும் இது மேம்படுத்தும்." என கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.