"தடுத்தால் குண்டுவீசி அழிப்போம்": ஓமன் நாட்டிற்கு டிரம்ப் மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் ஈரானிய கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகைக்கு ஓமன் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த தொலைபேசி பேட்டியில் டிரம்ப் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை ஈரான் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்குத் தமக்கு எந்த அவசரமும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அந்நாட்டின் IRGC-யுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதையும் உறுதிப்படுத்தினார். மேலும், ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணுஆயுதம் பெற முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய ஒப்பந்தம்
ஓமன் - ஈரான் இடையேயான புதிய ஒப்பந்தம்
டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு சற்று முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் அறிவித்திருந்தார்.
ஈரானுக்கு அருகில் உள்ள பாதை வழியாக கப்பல்கள் உள்ளே நுழையவும், ஓமனுக்கு அருகில் உள்ள பாதை வழியாக வெளியேறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இடைக்கால நடவடிக்கையாக இந்த வழித்தடத்தில் செல்லும் கப்பல்களுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பதற்றம்
காலக்கெடு முடிவடையும் நிலையில் தொடரும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான 60 நாள் காலக்கெடு நிறைவடையும் தருவாயில், எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஓமன் உடனான ஈரானின் உடன்பாட்டை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.