UGC NET தேர்வை ரத்து செய்து மறுதேர்வு அறிவித்த NTA: கொந்தளிப்பில் மாணவர்கள்
செய்தி முன்னோட்டம்
NTA கடந்த ஜூன் 22 முதல் 30 வரை நடத்திய UGC-NET 2026 தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் நிலவியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அப்பாடங்களுக்கான தேர்வுகளை முழுமையாக மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆரம்பத்தில் இத்தகைய பிழைகள் இயல்பானவை என அலட்சியப்படுத்தப்பட்ட போதிலும், வினாத்தாள்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதால் இக்கடின முடிவை NTA எடுத்துள்ளது. UGC-NET வினாத்தாள்களில் அறிஞர்களின் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டது, புத்தக தலைப்புகளில் பிழைகள், இலக்கண மற்றும் நிறுத்தற்குறி தவறுகள் மற்றும் மொழிபெயர்ப்பு சிக்கல்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், முந்தைய ஆண்டுகளின் வினாக்கள் பெருமளவில் மீண்டும் கேட்கப்பட்டதும் சர்ச்சையைக் கூட்டியது.
வலுக்கும் எதிர்ப்பு
NTA மீது வலுக்கும் எதிர்ப்பும் கலைக்கும் கோரிக்கையும்
வினாத்தாள் வடிவமைப்பில் நிலவிய இத்தகைய அடிப்படை கவனக்குறைவுகள், தங்களின் மாதக்கணக்கான உழைப்பையும் எதிர்காலத்தையும் பாதித்துள்ளதாகத் தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
NEET UG 2026 வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது UGC-NET மறுதேர்வு அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு அமைப்பின் தொடர்ச்சியான தவறுகளால் மாணவர்களின் அமைதியும் எதிர்காலமும் சீர்குலைவதாகக் கூறி, NTA அமைப்பைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.
கேள்விக்குறி
NTA அமைப்பின் பொறுப்புக்கூறல் கேள்விக்குறி
பிழைகளைத் திருத்துவது மட்டுமே தீர்வாகாது என்றும், தவறு நடக்கும்போதெல்லாம் மாணவர்களே அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பே ஏன் இத்தகைய தவறுகளைக் கண்டறிய முடியவில்லை என்றும், தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்காக நடத்தப்படும் இத்தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மூன்று பாடங்களுக்கும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கட்டணமின்றி மறுதேர்வு நடத்த NTA திட்டமிட்டுள்ளது.