Loading...
பீகார் அசோக் தாம் கோயிலில் பயங்கர நெரிசல்: மின் கம்பி விழுந்ததாக வதந்தி பரவியதில் 7 பக்தர்கள் பலி
பீகார் அசோக் தாம் கோயிலில் பயங்கர நெரிசல்

பீகார் அசோக் தாம் கோயிலில் பயங்கர நெரிசல்: மின் கம்பி விழுந்ததாக வதந்தி பரவியதில் 7 பக்தர்கள் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2026
10:00 am

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில், இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட முண்டியடித்தலில் 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கோயில் வளாகத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில், அங்கிருந்த மின் கம்பம் ஒன்று திடீரெனச் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மின்சாரம் தாக்கிவிடும் என்ற பயத்தில் வதந்திகள் பரவியதால், அலறியடித்துக்கொண்டு வெவ்வேறு திசைகளில் ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில், கோயிலின் அருகிலுள்ள ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் அடுத்தடுத்து வந்ததால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தில் மூங்கில் தடுப்புகள் உடைந்ததில், பக்தர்கள் ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு கீழே விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முரண்பட்ட தகவல்கள்

மாவட்ட நிர்வாகம் மற்றும் சாட்சிகளின் முரண்பட்ட தகவல்கள்

பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத அளவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதே விபத்திற்குக் காரணம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் போதிய காவலர்கள் இல்லை என்றும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, "லக்கிசாராய் அசோக் தாமில் நடந்த விபத்து மிகவும் துயரமானது மற்றும் நெஞ்சை உலுக்குவது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களுக்குத் துரிதமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்றிரவும் இதே அசோக் தாம் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT