இந்தியா - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தேக்கம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலையை எட்டியுள்ளதாகவும், இதற்கு மேல் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண்பது இரு நாடுகளுக்கும் மிகவும் கடினமானது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாகவும் கடினமாகவும் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.
கருத்து
டெல்லி நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பேச்சு
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகச் சமநிலை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளதாகவும், அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், காலப்போக்கில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்யவும் அமெரிக்கா விரும்புவது இயல்பானதே என்று அவர் குறிப்பிட்டார்.
முன்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வரி விதிப்பு ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டது என்றும், தற்போதைய சூழலில் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமே நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
முக்கியத்துவம்
இருதரப்பு ஒப்பந்தங்களின் முக்கியத்துவம்
உலகளாவிய அளவில் பன்முக வர்த்தக அமைப்புகளை பார்க்கையில், இருநாடுகளுக்கு இடையேயான நேரடி இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களே தற்போது அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் (EU) இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உதாரணமாக சுட்டிக்காட்டிய அவர், உள்நாட்டுத் தொழில்நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் வர்த்தக வாய்ப்புகளும் திறக்கப்படுவதாகக் கூறினார்.
இதன் மூலம் ஜவுளி, காலணி போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், அதேவேளையில் பன்முக வர்த்தக அமைப்புகளின் முக்கியத்துவம் என்றும் குறையாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.