அரசு பேருந்துகளில் இலவச பெண் பயணிகள் திட்டம்: வெற்றிப் பயணம் வழிகாட்டுதல்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா அரசுப் பேருந்து பயணத்தை உறுதி செய்யும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதேவேளையில், இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி வைத்த இத்திட்டத்தின்கீழ் மகளிர், சிறுமியர் மற்றும் திருநங்கைகளுக்கு வருமான உச்ச வரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கையிலோ எந்தக் கட்டுப்பாடும் இன்றி இலவசப் பயணம் வழங்கப்படுகிறது.
வழிமுறைகள்
வெற்றி பயணம் திட்டத்தின் வழிமுறைகள்
மாநகர, நகர்ப்புற எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் ஆர்டினரி மற்றும் மலைப்பகுதி ஆர்டினரி பேருந்துகளில் இச்சலுகையைப் பயன்படுத்தலாம்.
பயணிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், ஒவ்வொரு பயணத்திற்கும் ஜீரோ டிக்கெட் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
ETM மின்னணு கருவிகள் செயலிழந்தால் கையால் எழுதப்படும் மேனுவல் ஜீரோ டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும்.
கட்டுப்பாடுகள்
ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான முக்கியக் கட்டுப்பாடுகள்
நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி, பயணிகள் பாதுகாப்பாக ஏறவும் இறங்கவும் போதிய நேரம் வழங்கப்பட வேண்டும்.
காலை மற்றும் மாலை நேர நெரிசல் வேலைகளில் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்படுவதோ அல்லது வழித்தடங்கள் பாதியில் சுருக்கப்படுவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான புகார்களுக்கு 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அணுகலாம்.
மனு தள்ளுபடி
தடையை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
இத்திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது தடை விதிக்க வேண்டும் என ஈரோட்டை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.
மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் ஒரு பொது நலத் திட்டத்தை, குறிப்பிட்ட இரு வழித்தடங்களில் மட்டும் பேருந்து இயக்கும் மனுதாரர் எதிர்க்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.