LOADING...
'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு
அதிபரின் இந்த அலட்சியமான பேச்சு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2026
04:12 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எனக்கு பணவீக்கம் (Inflation) மிகவும் பிடிச்சிருக்கு" என்று கூறியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவின் பணவீக்கம் முதல்முறையாக 4 சதவீதத்தைத் தாண்டி, தற்போது 4.2% ஆக உயர்ந்துள்ள நிலையில் அதிபரின் இந்த அலட்சியமான பேச்சு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்

டிரம்பின் விளக்கமும் எதிர்க்கட்சிகளின் கண்டனமும்

தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து New York Post-ற்கு விளக்கம் அளித்த டிரம்ப், "பணவீக்க விகிதம் நிபுணர்கள் கணித்ததை விட இன்னும் அதிகமாக உயராமல் கட்டுக்குள் இருந்ததைக் குறிக்கவே நான் அவ்வாறு கூறினேன். எனது கருத்தை அரசியல் எதிரிகள் தவறாகச் சித்தரிக்கிறார்கள்" என்று கூறினார். இருப்பினும், டிரம்பின் இந்த கருத்தை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், "டிரம்பின் பேச்சு கேமரா ஆதாரத்துடன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் கேட்கும் படி பதிவாகியுள்ளது" என்றார். ஹவுஸ் மைனாரிட்டி தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் கூறுகையில், "அன்றாட அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அதிபருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இந்த அசாதாரண அறிக்கை காட்டுகிறது" என்று சாடினார்.

காரணம்

எரிசக்தி விலையேற்றத்திற்கு ஈரான் போரே காரணம்

தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வுக்கு அமெரிக்கா - ஈரான் இடையே நடந்து வரும் போரே முக்கியக் காரணம் என்று அதிபர் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு மூலக் காரணியாகும். "இந்த போர் முடிவுக்கு வரும்போது, பணவீக்கத்தின் அளவு பாறை உருண்டு விழுவதைப் போல மிக வேகமாக வீழ்ச்சியடையும்" என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவம் நடத்திய ரகசிய ஆபரேஷன் மூலமாக 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், கச்சா எண்ணெய் விலை 250 டாலருக்குச் செல்லாமல் 90 டாலருக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

உண்மை நிலை

புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை நிலை என்ன?

அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள மே மாத விபரங்களின்படி, கடந்த 2025 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் பணவீக்கம் 4.2% அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த விலைவாசி உயர்வில் 60 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை எரிசக்தி மட்டுமே வகிக்கிறது. மே மாதத்தில் மட்டும் எரிசக்தி விலை 3.9% உயர்ந்துள்ளது. உணவு மற்றும் எரிசக்தி அல்லாத பிற பொருட்களின் ஆண்டு விலை உயர்வு 2.9% ஆக மட்டுமே உள்ளது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் நிர்ணயித்துள்ள 2% இலக்கை விட இந்த பணவீக்கம் இருமடங்கு அதிகமாக உள்ளதால், வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

Advertisement