சீனாவுக்கு செக்: ட்ரோன்கள் இறக்குமதிக்கு 100% வரி விதித்து டொனால்ட் டிரம்ப் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்கள் மற்றும் அதன் பாகங்களை அளவுக்கு அதிகமாக சார்ந்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மீது 100% வரை இறக்குமதி வரி விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வ பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் பெரிய அளவிலான ட்ரோன்கள் மற்றும் உணர்திறன் வாய்ந்த பாகங்களுக்கு 100% வரியும், சிறிய அளவிலான சாதாரண வணிக பயன்பாட்டு ட்ரோன்களுக்கு 25% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
வரி
எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?
வெவ்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த வரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய யூனியன் (EU), ஜப்பான், தென்கொரியா, தைவான், சுவிட்சர்லாந்து மற்றும் லீச்டென்ஸ்டைன் ஆகிய கூட்டணி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்களுக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஐக்கிய ராஜ்யத்திலிருந்து (UK) வரும் இறக்குமதிகளுக்கு 10% வரி பொருந்தும்.
பிற நாடுகளுக்கு (முக்கியமாக சீனா), 100% வரை அதிகபட்ச வரி விதிக்கப்படும்.
இந்த உத்தரவு கையெழுத்தான 21 நாட்களில் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அறிக்கை
டிரம்ப் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை
அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க சந்தையில் வெளிநாட்டு ட்ரோன்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும், நாட்டின் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான உள்நாட்டு உற்பத்தி இல்லாததும் கண்டறியப்பட்டது.
சில வெளிநாட்டு ட்ரோன் நிறுவனங்களின் உதிரி பாகங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும், வெளிநாட்டு சார்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
தட்டுப்பாடு
ஈரான் போரும் ட்ரோன் தட்டுப்பாடும்
ஈரானுடன் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரின் காரணமாக, அமெரிக்க ராணுவம் தனது ட்ரோன் படையில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
போரின் போது சுமார் 45 MQ-9 ரீப்பர் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளது. இதனால் போருக்கு முன் இருந்த ரீப்பர் ட்ரோன்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
இதன்காரணமாக, குறைந்த செலவிலான மற்றும் திரளாக சென்று தாக்கும் ஆயுதமேந்திய ட்ரோன் பயன்பாட்டிற்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை மாறி வருகிறது.
மேலும், ஈரான் போருக்கான செலவுகள் மற்றும் காலியான ராணுவக் கையிருப்புகளை மீண்டும் நிரப்புவதற்காக டிரம்ப் நிர்வாகம் 67 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை கோரியுள்ளது.