பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் F-16 போர் விமான ஆதரவு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக 686 மில்லியன் டாலர் (சுமார் ₹5,700 கோடி) மதிப்புள்ள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல், அமெரிக்கப் பாதுகாப்புக் கூட்டுறவு நிறுவனத்தின் (DSCA) கடிதம் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், F-16 விமானங்களை நவீனமயமாக்குவதற்கும் செயல்பாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தேவையான லிங்க்-16 தகவல் தொடர்பு அமைப்புகள், கிரிப்டோகிராஃபிக் உபகரணங்கள், ஏவியோனிக்ஸ் மேம்படுத்தல்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் முழு தளவாட ஆதரவு ஆகியவை அடங்கும். DSCAஇன் கடிதத்தின்படி, இந்த விற்பனை பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளின்போது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிக் குழுக்களுடன் பாகிஸ்தானின் செயல்பாட்டுத் திறனை தக்கவைக்க உதவும்.
பிராந்திய சமநிலை
பிராந்திய சமநிலை மற்றும் இந்தியாவிற்கான ஒப்பந்தம்
மேலும், இந்த மேம்படுத்தல்கள் விமானங்களின் ஆயுட்காலத்தை 2040 வரை நீட்டிக்கும் என்றும், விமானப் பாதுகாப்பு கவலைகளுக்குத் தீர்வு காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை பிராந்தியத்தில் உள்ள ராணுவ சமநிலையை எந்த வகையிலும் பாதிக்காது என்று DSCA மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கான இந்த F-16 ஒப்பந்தத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்கா இந்தியாவுக்கு 93 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதில், ஜாவலின் ஏவுகணை அமைப்பு மற்றும் M982A1 எக்ஸிகேலிபர் தந்திரோபாய ரவுண்டுகள் ஆகியவை அடங்கும். இந்த விற்பனையானது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், பிராந்திய அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.