பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்க உறவு, இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு சவால்: அமைச்சர் ஜெய்சங்கர் மகன் கருத்து
செய்தி முன்னோட்டம்
இந்திய-அமெரிக்க உறவில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத்துவத்துடனான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடுதான் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் மகனும், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமெரிக்காவின் செயல் இயக்குநருமான துருவா ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் துணைக் குழுவின் கூட்டத்தில் பேசிய துருவா ஜெய்சங்கர், "அமெரிக்காவின் இந்த ஈடுபாடு குறித்து இந்தியாவுக்குக் கவலை உள்ளது. பாகிஸ்தான் அரசு அல்லாத பயங்கரவாத அமைப்புகளை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதில் நீண்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக இந்தியாவின் அனுபவம் என்னவென்றால், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பெரும்பாலும் பாகிஸ்தானின் சாகசப் போக்கிற்கு பங்களித்துள்ளது." என்று குறிப்பிட்டார்.
முதலீடு
பாகிஸ்தானில் அமெரிக்காவின் பெரும் முதலீடு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்து அமெரிக்கா ஒரு 'இரண்டு நாடுகளையும் பிரித்துப் பார்க்கும் கொள்கையை' பின்பற்றி வந்த நிலையில், இந்த உறவு மீண்டும் அதிகரித்துள்ளது என்றும், வர்த்தகம் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான வேறுபாடுகளை வெற்றிகரமாகக் கையாண்டால் மட்டுமே எதிர்கால ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். துருவா ஜெய்சங்கரின் இந்த கருத்து, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சுரங்க நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான ஒரு பெரிய முதலீட்டை அமெரிக்கா அறிவித்த நேரத்தில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், டிரம்ப் நிர்வாகத்தால் விருந்தளிக்கப்பட்ட சம்பவத்தையும், அப்போது அவர் காஷ்மீர் குறித்து இந்தியாவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததையும் துருவா ஜெய்சங்கர் சுட்டிக் காட்டினார்.