Loading...
அமெரிக்க இடைத்தேர்தல் 2026: விவேக் ராமசாமி முதல் ரோ கண்ணா வரை களம் காணும் இந்தியர்கள்
2026 அமெரிக்க இடைத்தேர்தலில் விவேக் ராமசாமி, ரோ கண்ணா உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க இடைத்தேர்தல் 2026: விவேக் ராமசாமி முதல் ரோ கண்ணா வரை களம் காணும் இந்தியர்கள்

எழுதியவர் Vasuki
Nov 02, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய மாகாணங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அதிகளவில் போட்டியிட்டு உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளனர். ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கான உச்சக்கட்டப் போட்டியில் களம் காணும் பிரபல தொழிலதிபர் விவேக் ராமசாமி தொடங்கி, சிலிகான் வேலி நாடாளுமன்றத் தொகுதி, அரிசோனா பாலைவனம் மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் பதவி வரை இந்தியக் குடியேறிகளின் அடுத்த தலைமுறையினர் இரு பிரதான கட்சிகளிலும் முக்கிய முகங்களாக உருவெடுத்துள்ளனர்.

சிலிகான் வேலி போட்டி

ஓஹியோ ஆளுநர் களத்தில் விவேக் ராமசாமி

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட 41 வயதான பயோடெக் தொழிலதிபர் விவேக் ராமசாமி, ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் ஓஹியோ ஆளுநர் வேட்பாளராகக் களம் கண்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் முழு ஆதரவோடு 82% வாக்குகள் பெற்று பிரைமரி தேர்தலில் வென்ற இவர், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் சுகாதாரத் துறை இயக்குநர் ஏமி ஆக்டனை எதிர்கொள்கிறார்.

இதேபோல், கலிபோர்னியாவின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியில் பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்ட ஜனநாயகக் கட்சி எம்.பி. ரோ கன்னா, தனது 6-வது வெற்றியை நோக்கிப் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் கிரிசெல் கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அதிகாரி ரிதேஷ் தாண்டன் போட்டியிடுவதால், அத்தொகுதி முழுமையாக இரு இந்திய வம்சாவளியினருக்கு இடையிலான நேரடிப் போர்க்களமாக மாறியுள்ளது.

சவால்கள்

அனுபவமிக்க பிரதிநிதிகள்

சென்னையில் பிறந்தவரும், பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வான முதல் தெற்காசிய பெண்ணுமான பிரமிளா ஜெயபால் (வாஷிங்டன் 7-வது தொகுதி), காங்கிரஸில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் மருத்துவர் அமி பேரா (கலிபோர்னியா 6-வது தொகுதி) மற்றும் விர்ஜினியாவின் சுகாஸ் சுப்ரமணியம் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றனர்.

அரிசோனாவின் 1-வது தொகுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான அமிஷ் ஷா, ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற முன்னாள் என்.எஃப்.எல் வீரர் ஜே ஃபீலியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

ஃபீலி விளையாடிய காலத்தில் அதே அணியின் மைதான மருத்துவராக அமிஷ் ஷா பணியாற்றிய நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் மோதுகின்றனர்.

புளோரிடாவின் 22-வது தொகுதியில் முன்னாள் ஆசிரியை பியா டாண்டியா ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

இந்திய பெண்மணிகள்

மாகாண உயர் பதவிகள்

நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு அப்பால், நியூயார்க் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஃபெடரல் வழக்கறிஞர் சரிதா கோமதிரெட்டி போட்டியிட்டு, தற்போதைய அட்டர்னி ஜெனரல் லெட்டிஷியா ஜேம்ஸை எதிர்கொள்கிறார்.

மேரிலாண்ட் துணை ஆளுநராக உள்ள ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகராட்சி கவுன்சிலரான நித்யா ராமன், அந்நகர மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்த்துப் போட்டியிட்டு வரலாற்றில் முதல் தெற்காசிய மேயராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவர்கள், பொறியாளர்கள் எனத் தொழில்ரீதியாக மட்டுமே முத்திரை பதித்த புலம்பெயர் இந்தியச் சமூகம், இன்று கொள்கை வகுக்கும் அமெரிக்க அதிகார பீடங்களை நோக்கிப் பிரம்மாண்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பதை இத்தேர்தல் வெளிப்படுத்துகிறது.

ADVERTISEMENT