போர் தீவிரமடைய வாய்ப்பு! அமெரிக்கர்களை வெளியேற அறிவுறுத்திய தூதரகங்கள்! ஈரானின் எரிசக்தி மையங்களைக் குறிவைக்கத் திட்டம்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி மாதம் தொடங்கிய ராணுவ மோதல்கள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்கத் தூதரகங்கள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜோர்டான், இஸ்ரேல், ஈராக், லெபனான், குவைத், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் வெளியிட்ட பாதுகாப்பு அறிவிப்பில், "பிராந்தியத்தில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால், அமெரிக்கர்கள் உடனடியாக வெளியறத் திட்டமிடுமாறும் அல்லது எந்நேரமும் வெளியேறத் தயாராக இருக்குமாறும்" கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், விமான சேவைகள் ரத்து மற்றும் வான்வெளி மூடப்படுவதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் திட்டம்
ஈரானின் எரிசக்தி மையங்களைக் குறிவைக்கத் திட்டம்?
ஈரானை போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பணிய வைக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது பிரம்மாண்ட வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இத்தாக்குதலுக்கான இறுதி ஒப்புதலை இன்னும் வழங்கவில்லை என்ற போதிலும், ஈரான் தாங்க முடியாத அளவிற்குப் பலமான தாக்குதலை நடத்துவோம் என கேம்ப் டேவிட் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரான் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
ஈரானின் தஸ்னீம் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், "அமெரிக்காவின் எந்தவொரு முட்டாள்தனமான நடவடிக்கைக்கும் தக்க பதிலடி கொடுக்க முழுமையான வியூகம் தயார் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க எரிசக்தி மையங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அமெரிக்காவிற்குப் பாதுகாப்புக் கவசமாக செயல்படும் எந்தவொரு நாடும் இந்த போர்த் தீயில் சிக்கும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலைமை
தூதரக வழிகாட்டுதல்கள் மற்றும் தற்போதைய நிலைமை
ஜோர்டானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்களுக்குப் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பு வெடிகுண்டு புகலிடங்களை அறிந்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த போர்ப் பதற்றம் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் விமானப் போக்குவரத்தில் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.