சீனாவின் உய்குர் மக்களை கட்டாய நாடுகடத்துவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதிப்பு
செய்தி முன்னோட்டம்
உய்குர் இனத்தவர்களையும் பிற பாதிக்கப்படக்கூடிய இன அல்லது மதக் குழுக்களையும் சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்புவதில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அதிகாரிகளை குறிவைத்து அமெரிக்கா புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
துன்புறுத்தலை எதிர்கொள்ளும் நபர்களை நாடு கடத்துமாறு சீனா அரசாங்கங்கள் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தை எதிர்கொள்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், இந்தக் கொள்கை உடனடியாக அமலுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற நாடுகடத்தல்களுக்குப் பொறுப்பானவர்கள் அல்லது உடந்தையாக இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் என அனைவருக்கும் பொருந்தும்.
தாய்லாந்து
தாய்லாந்து அதிகாரிகளை குறிவைத்து நடவடிக்கை
ஆரம்ப நடவடிக்கைகள் பிப்ரவரி 27 அன்று 40 உய்குர் மக்களை சீனாவிற்கு கட்டாயமாக திருப்பி அனுப்பியதில் தொடர்புடைய தாய்லாந்து அரசாங்க அதிகாரிகளை குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்று ரூபியோ வலியுறுத்தினார்.
சீனா உய்குர் மக்களை திட்டமிட்டு துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், சீனாவின் கட்டாய நாடுகடத்தலுக்கான கோரிக்கைகளை எதிர்க்க உலக அரசாங்கங்களை வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கை, உய்குர்களை குறிவைத்து சீனா மேற்கொள்ளும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான அதன் குற்றங்களை எதிர்க்கும் நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்துகிறது.