தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். தென் கொரியாவின் பிரதமர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இடையேயான உச்சி மாநாடு நேற்று(மார் 16) நடைபெற்றது. ஒரு தென் கொரிய பிரதமர் ஜப்பானுக்கு செல்வது மிகவும் அரிதாகும். இதற்கு முன், இது போன்ற ஒரு சம்பவம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தென் கொரியா மற்றும் ஜப்பானின் பொதுவான எதிரி நாடான வட கொரியா, சமீபகாலமாக அதிக ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் வீசி பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
"இன்றியமையாத கூட்டாளிகள்": அமெரிக்கா பாராட்டு
தென் கொரியா-ஜப்பான் நாட்டின் இடையேயான இந்த உச்சி மாநாட்டுக்கு முந்தைய நாளும் வட கொரியா ஒரு ஏவுகணையை ஏவி பயிற்சி செய்தது. ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஜப்பானில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த உச்சி மாநாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பானையும் தென் கொரியாவையும் "இன்றியமையாத கூட்டாளிகள்" என்று கூறி, இந்த உச்சிமாநாட்டைப் பாராட்டியுள்ளது. "இந்த நேர்மறையான நடவடிக்கையை எடுத்ததற்காக பிரதமர் கிஷிடா மற்றும் ஜனாதிபதி யூன் ஆகியோரை நாங்கள் பாராட்டுகிறோம்." என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.