ரஷ்யா மற்றும் ஈரான் மீதான எண்ணெய் தடையில் சலுகை கிடையாது: அமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்குப் புதிய நெருக்கடி
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தடைச் சலுகையை இனி நீட்டிக்கப் போவதில்லை என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிப்ரவரி இறுதியில் தொடங்கிய அமெரிக்க - ஈரான் மோதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டியதைத் தொடர்ந்து, விலையை கட்டுப்படுத்த வழங்கப்பட்ட இந்த 30 நாள் சலுகை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: America will end sanctions waiver allowing India and others to buy Russian and Iranian oil pic.twitter.com/eZCl9q6J7r
— Shashank Mattoo (@MattooShashank) April 15, 2026
பின்னணி
30 நாள் சலுகையும் அதன் பின்னணியும்
மார்ச் 12-ம் தேதி, அமெரிக்க கருவூல துறை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு தற்காலிகச் சலுகையை வழங்கியது. இதன்படி, மார்ச் 11-ம் தேதிக்கு முன்னதாகவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெயை மட்டும் இந்தியா இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. "கடலில் ஏற்கனவே தேங்கியிருக்கும் எண்ணெயை சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் உலகளாவிய எரிசக்தி விலையை நிலைப்படுத்தவே இந்தச் சலுகை வழங்கப்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவிற்கு பெரிய அளவில் நிதியுதவி கிடைத்துவிடாது," என்று ஸ்காட் பெசென்ட் விளக்கமளித்திருந்தார்.
தாக்கம்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட தாக்கம்
இந்தச் சலுகை காலத்தை பயன்படுத்தி, இந்தியா சுமார் 30 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெயை ஆர்டர் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்று மடங்கு அதிகரித்தது. ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து மீண்டும் இறக்குமதியை தொடங்கின. ரஷ்யாவிற்கான சலுகை ஏப்ரல் 11-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஈரானுக்கான சலுகையும் வரும் ஏப்ரல் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், இனிவரும் நாட்களில் இந்தியா மாற்று வழிகளில் கச்சா எண்ணெயைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சலுகை நீட்டிப்புக்காக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் அழுத்தம் கொடுத்தபோதிலும், அமெரிக்கா தனது முடிவில் உறுதியாக உள்ளது.