பரபரக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம்: கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை
நியூயார்க் டைம்ஸ்/சியானா கல்லூரியின் இறுதிக் கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் ஏழு போர்க்கள மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், நெவாடா, வட கரோலினா மற்றும் விஸ்கான்சினில் கமலா ஹாரிஸ் ஓரளவு முன்னிலை பெற்றுள்ளதாகவும், அரிசோனாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. அக்டோபர் 24 முதல் நவம்பர் 2 வரை ஏழு மாநிலங்களில் 7,879 வாக்காளர்களை ஆய்வு செய்த கருத்துக்கணிப்பின்படி, மிச்சிகன், ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் இருவரும் நெருங்கிய பந்தயத்தில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுவுள்ள நிலையில் 6.8 கோடி பேர் முன்னதாகவே தங்கள் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். வார இறுதி நாளை முன்னிட்டு ஓட்டுச்சாவடிகளில் பெரிய கூட்டம் அலைமோதியதாக செய்திகள் வெளியாகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள். முதலில், ஜோ பைடன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்; ஆனால், வயோதிகமும், டிரம்புடன் நடந்த தோல்வியுற்ற விவாதத்தின் காரணமாக, கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் சமநிலையிலேயே உள்ளனர், இது தேர்தலுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.