இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு
சென்ற ஆண்டு, அமெரிக்காவில் படித்து வந்த ஆந்திரா மாணவி ஒருவர், போலீஸ் ரோந்து வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், அவர் மீதான வழக்கை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், தொடர முடியாது என சியாட்டில் அட்டார்னி கூறி அவரை விடுத்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா. இவர் சென்ற ஆண்டு ஜனவரி மாதம், சாலையை கடந்தபோது கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டி வந்த ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி டேனியல், சியாட்டில் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு, மாணவி குறித்து கேலியாக பேசி சிரித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு முன்னர் என்ன நடந்தது?
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஜானவி கண்டூலா என்ற மாணவி படித்து வந்தார். அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலை படித்து வந்த அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சாலையை கடக்கும்போது, போலீஸ் ரோந்து வாகனம் மோதியது. மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜானவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி டேனியல், உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு வழக்கு பற்றி,"இறந்த பெண் ஒரு சாதாரணமான பெண் தான். பெரும் மதிப்பு மிக்க நபர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்" என சிரித்துக்கொண்டே பேசினார். இந்த இரண்டு சம்பவங்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பை தூண்டியது.