ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் பணிமாற்றம்
ஆந்திரா மாணவி ஜான்வி மரணத்தை பற்றி கிண்டலடித்த காவலதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தங்கி படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி, ஜானவி கந்துலா. இவர் கடந்த ஜனவரி மாதம், சவுத் லேக் யூனியனில் சாலையை கடந்தபோது போலீசாரின் ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், காவல்துறை அதிகாரிகளின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த பாடிகேம்-இல் பதிவான ஒரு வீடியோ பெரும் கண்டனத்தை ஈர்த்தது. அதில், விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்திய மேலதிகாரி ஒருவர், அந்த பெண் தான் இறந்துவிட்டாளே என்று கிண்டலாக சிரித்தபடி பேசுவது போல இருந்தது அனைவராலும் கண்டிக்கப்பட்டது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காவல் அதிகாரி
இது பற்றி பலரும், முறையான விசாரணையும் வேண்டும் எனக்கோரிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சியாட்டில் போலீஸ் அதிகாரி மற்றும் தொழிற்சங்கத் தலைவரான டேனியல் ஆடரர் "நிர்வாக ரீதியாக செயல்படாத பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்று சியாட்டில் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆடரரை ஊதியமின்றி இடைநீக்கம் செய்யுமாறு, போலீஸ் கண்காணிப்புக் குழு தெரிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த இடமாற்றத் தகவல் வந்துள்ளது. ஆடரர் எப்போது இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் மீண்டும் பணியமர்த்தப்பட்டார் என்பது குறித்த தகவல் இல்லை. விபத்தில் பலியான ஜானவி கந்துலா, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.