அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா
செய்தி முன்னோட்டம்
சீனாவின் கண்காணிப்பு பலூன் ஒன்றை அமெரிக்கா சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. அதை தொடர்ந்து 3 வெவ்வேறு பறக்கும் பொருட்களையும் அமெரிக்கா சுட்டுத்தள்ளி உள்ளது.
ஆனால், அதை "அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள்" என்று விவரித்த அமெரிக்கா, அந்த பொருட்களின் முழு விவரத்தையும் வெளியிடவில்லை.
பாதுகாப்புக்கு பங்கம் வரலாம் என்று கூறி அனைத்து பறக்கும் பொருட்களையும் அமெரிக்கா தற்போது சுட்டு வீழ்த்தி கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனையால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்ககும் பெரும் பனி போர் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 2022 முதல் கிட்டத்தட்ட 10 பலூன்களை அமெரிக்கா தங்கள் வான்வெளிக்குள் அனுப்பியதாக இன்று(பிப் 13) சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதைப் பற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பேசி இருக்கிறார்.
சீனா
செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பேசியதாவது:
அமெரிக்கா, பிற நாடுகளின் வான்வெளிக்குள் சட்டவிரோதமாக நுழைவது மிகவும் சாதாரணமானது.
கடந்த ஆண்டு மட்டும், அமெரிக்க பலூன்கள் 10 முறைக்கு மேல் சீன அதிகாரிகளின் அனுமதியின்றி சட்டவிரோதமாக சீனாவின் எல்லைக்குள் பறந்துள்ளன.
அமெரிக்காவின் பறக்கும் பலூன்கள் சட்டவிரோதமாக சீனாவின் வான்வெளிக்குள் நுழைவதைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், அதை அமெரிக்காவிடம் கேளுங்கள். என்று அவர் கூறி இருக்கிறார்.
முதன்முதலாக அமெரிக்காவின் வான்வெளியில் சீனாவின் பலூன் பறக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டிய போது, அந்த பலூன் ஆளில்லா வானிலை பலூன் என்றும் அது வழி தவறி அமெரிக்காவிற்குள் நுழைந்துவிட்டது என்றும் சீனா கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.