இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்
இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு, விமானத்தில் ஏறிய அந்த பெண் பயணி தனது இருக்கையில் அமர்ந்துள்ளார். இதனிடையே பயணிகளுக்கு உதவிசெய்து கொண்டிருந்த விமான பணிப்பெண் ஒருவர் மீனாட்சி சென்குப்தா கீழே வைத்திருந்த பையை எடுத்து இருக்கைக்கு மேலே உள்ள கேபினிற்குள் வைக்கும்படி கூறியுள்ளதாக தெரிகிறது. அதற்கு மீனாட்சி சென்குப்தா தான் ஒரு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி என்றும், எனவே பையை எடுத்து மேலேவைக்க தனக்கு உதவுமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. அவருடைய கோரிக்கையை ஏற்கமறுத்த அந்த விமான பணிப்பெண், அது தன்னுடைய வேலையில்லை என்றும் கூறியுள்ளார்.
கூட்டாக சேர்ந்து பெண் பயணியை வெளியேற்றிய விமான ஊழியர்கள்
மேலும் அந்த விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் அனைவரும் மிக அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், தன்னை விமானத்தில் இருக்கும் நோக்குடன் அவர்கள் நடந்து கொண்டதாகவும் அந்த பெண் பயணி குற்றம்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை விமான ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து விமானத்தில் இறக்கியும்விட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க விமான நிறுவனம் கூறுகையில், குழு உறுப்பினர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறியதால் இடையூறு விளைவித்த அந்த பயணி வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க அமெரிக்க விமான நிறுவனத்திடம் கேட்டுள்ளது. அண்மையில் இதே போல் பயணிகளை விட்டு சென்றதற்காக 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.