சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானியப் படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை அமெரிக்க இராணுவம் பதிலடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால், 18 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தாமல், ஈரானுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியா, ஈராக்கில் உள்ள 85 ஈரான் ஆதரவு இடங்கள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
"ஒரு அமெரிக்கருக்கு தீங்கு செய்தால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்"
"எங்கள் பதிலடி இன்று தொடங்கியுள்ளது. இது நாங்கள் இனி நினைக்கும் நேரத்தில் நினைக்கும் இடத்தில் தொடரும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "மத்திய கிழக்கில் அல்லது உலகில் வேறு எந்த இடத்திலும் மோத வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு தீங்கு செய்ய முற்படும் அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு அமெரிக்கருக்கு தீங்கு செய்தால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களால் குறைந்தது 18 ஈரான் சார்பு போராளிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் போர் கண்காணிப்பாளருக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.