பாகிஸ்தானில் "அடையாளம் தெரியாத நபர்களால்" தீர்த்துக்கட்டப்படும் பயங்கரவாதிகள்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அமீர் ஹம்சா, லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டுள்ளார். கடந்த 2-3 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. 1980-களில் ஹபீஸ் சயீத்துடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பாவை உருவாக்கியதில் அமீர் ஹம்சாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், லாகூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குறிவைக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக, LeT, JeM மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளை சேர்ந்த தளபதிகள் பாகிஸ்தான் மற்றும் Pok-ல் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
மர்ம நபர்கள்
தொடரும் "அடையாளம் தெரியாத நபர்களின்" வேட்டை
முகமது தாஹிர் அன்வர்: JeM தலைவர் மசூத் அசாரின் சகோதரரான இவர், அமீர் ஹம்சா கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜியா-உர்-ரஹ்மான்(அபு கதால்): 2024 மார்ச் மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட இவர், 2024 ஜூன் 9 அன்று ரியாசியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர். பரம்ஜித் சிங் பஞ்வார்: காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் (KCF) தலைவர், 2023-ல் லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஷாகித் லத்தீப்: 2016 பதான்கோட் விமானத் தளத் தாக்குதலின் முக்கியச் சதியாளரான இவர், 2023 அக்டோபரில் சியால்கோட்டில் உள்ள மசூதி ஒன்றிற்குள் வைத்துத் தீர்த்துக்கட்டப்பட்டார்.
பழைய கணக்கு
பழைய கணக்குகளும் முடிவுக்கு வரும் அத்தியாயங்களும்
இந்த தொடர் கொலைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, 1999-ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் IC 814 கடத்தலில் ஈடுபட்ட ஜஹூர் மிஸ்த்ரி கொல்லப்பட்டது. 2022 மார்ச் மாதம் கராச்சியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். விமான கடத்தலின் போது பயணி ரூபின் கட்டியால் என்பவரை துள்ளத் துடிக்கக் கொன்றவர் இந்த மிஸ்த்ரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைகளுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை. பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டினாலும், பயங்கரவாத அமைப்புகளுக்குள் நிலவும் உள்நாட்டுப் பகை மற்றும் அதிகாரப் போட்டி காரணமாகவே இத்தகைய கொலைகள் நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.