காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் வரைவு தீர்மானம் மீது, செவ்வாய்கிழமை வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாக அதன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தை, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம்(எந்த தீர்மானத்தையும் தனி நாடாக தடுக்கும் அதிகாரம்) கொண்டு தடுத்ததை தொடர்ந்து, நாளை ஐநா சபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் போர் நிறுத்தம் ஏற்படுத்த கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் தோல்வியை தழுவியது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தால் தாக்கல் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், 121 வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 14 நாடுகள் எதிராக வாக்களித்தனர்.