
ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர்
செய்தி முன்னோட்டம்
பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று ஈரான் தலைவர் இன்று(மார் 6) கூறியுள்ளார்.
பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுக்கப்பட்டதாக ஈரான் மீது சில நாட்களுக்கு முன் குற்றசாட்டு எழுந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஈரானின் 30 மாகாணங்களில் 21 மாகாணங்களுக்கு பரவியதாக கூறப்படும் நச்சுத்தன்மையால் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நவம்பரில் இருந்து சுமார் 700 பள்ளி மாணவிகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இது குறித்து விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளார்.
ஈரான்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை தடுக்க இதை செய்தார்களா?
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடந்து வந்த ஈரானில், போராட்டக்காரர்களுக்கு எதிரான அடிப்படைவாத குழுக்களின் பழிவாங்கும் செயல் இது என்று கூறப்படுகிறது.
பெண்கள் பள்ளிகளை மூடுவதற்கு இஸ்லாமியக் குழுக்கள் மேற்கொள்ளும் இரகசிய முயற்சியாகவே இவை பார்க்கப்படுகின்றன.
இந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள், பிளீச்சிங் பவுடர் அல்லது கிளோரின் போல் ஏதோவொரு வாசனை வருவதை முதலில் உணர்ந்திருக்கின்றனர். அதன் பின், அவர்களுக்கு தலைவலி, தலைச்சுற்றல், சுவாச பிரச்சனைகள் மற்றும் குமட்டல் ஏற்பட்டிருக்கிறது.
சிலருக்கு கைகால்களில் தற்காலிக முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிகாரபூர்வமாக எந்த மரணமும் பதிவாகவில்லை என்றாலும், 11 வயது மாணவி ஃபதேமே ரெசி கடந்த வாரம் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.