பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான்
ஈரான் நாடுமுழுவதும் மாபெரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில், பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க மாணவிகளுக்கு விஷவாயு கொடுத்ததாக ஈரான் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. நேற்று(பிப் 26) ஈரானிய துணை அமைச்சர் ஒருவர், "பெண்களுக்கான கல்வியை நிறுத்தும் நோக்கத்துடன் புனித நகரமான கோமில் பள்ளி மாணவிகளுக்கு சிலர் விஷம் கொடுக்கிறார்கள்" என்று கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன. தகவல்களின்படி, துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி, விஷம் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில், ஈரானிய பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட மாபெரும் நோய் பரவல் இதனாலேயே ஏற்பட்டது என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரசாயனங்களை பயன்படுத்தி சிலர் வேண்டுமென்றே விஷம் வைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பள்ளியை மொத்தமாக மூடும் நோக்கத்தில் செய்யப்பட்டது: பனாஹி
கடந்த ஆண்டு நவம்பரில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோமில் பல விஷவாயு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட பலருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. "கோம் பள்ளிகளில் பல மாணவிகள் விஷவாயுவால் தாக்கப்பட்ட பிறகு, பெண்கள் பள்ளியை மொத்தமாக மூடும் நோக்கத்தில் சிலர் இதை செய்தனர் என்பது தெரியவந்தது." என்று பனாஹி கூறியதாக IRNA மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 14 அன்று, நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நகரின் கவர்னரேட்டிற்கு வெளியே கூடி இதை எதிர்த்து போராடி இருக்கின்றனர். இதுவரை, இந்த வழக்குகளில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று AFP தெரிவித்துள்ளது.