
இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்
செய்தி முன்னோட்டம்
இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத ஒரு பெரிய வெடிகுண்டு, தென்மேற்கு போலந்தில் உள்ள வ்ரோக்லா நகரின் ரயில்வே மேம்பாலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதால், 2,500 குடியிருப்பாளர்கள் இன்று(மே 26) வெளியேற்றப்பட்டனர்.
250 கிலோகிராம் எடையுள்ள இந்த வெடிகுண்டு, போலந்து நகரமான வ்ரோக்லாவில் கட்டுமானப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
போரின் போது பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் எஸ்சி-250 வான்குண்டு இது என்று போலந்தின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
வெடிகுண்டு அகற்றப்படும் வரை ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக போலந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிகுண்டை அகற்றுவதற்கு, வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிந்த வருகின்றனர்.
details
அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை: காவல்துறை
அனைத்து குடியிருப்பாளர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதிகாரிகள் அவர்களை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா ஃப்ரியஸ் கூறியுள்ளார்.
"வெடிக்காத வெடிகுண்டுகளால் மனித உடல்நலம் மற்றும் உயிருக்கு ஆபத்து" ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று அறிவித்த காவல்துறை, மக்கள் வெளியேற வேண்டும் என்று பொது அழைப்பு விடுத்தது.
இரண்டாம் உலகப் போரின்போது, வ்ரோக்லா நகரம் ஜெர்மனியின் ப்ரெஸ்லாவ் நகரமாக இருந்தது.
'நாட்சி' ஜெர்மனி சரணடைவதற்கு முன், கடுமையான சோவியத் குண்டுவீச்சினால் இந்த நகரம் பேரழிவை கண்டது.
போருக்குப் பிறகு எல்லைகள் மீண்டும் வரையப்பட்டபோது இந்த நகரம் போலந்தின் ஒரு பகுதியாக மாறியது.
தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனிக்கு இந்த பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.